செய்திகள்
உடுமலை கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட காட்சி.

உடுமலை கடைகளில் 40 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

Published On 2021-08-14 08:51 GMT   |   Update On 2021-08-14 08:51 GMT
அதிகாரிகள் விசாரணையில், குறிச்சிக்கோட்டையில் உள்ள மளிகை கடையில் டீத்தூள் வாங்கியதாக தெரிவித்தனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் குழுவினர் உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், உணவு உற்பத்தி நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது டீக்கடை மற்றும் பேக்கரிகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அதிகாரிகள் விசாரணையில், குறிச்சிக்கோட்டையில் உள்ள  மளிகை கடையில் வாங்கியதாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் 40 கிலோ கலப்படம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற டீத்தூள் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மேலும் டீத்தூளை மாதிரி எடுத்து பரிசோதனைக்காக  ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு  அறிக்கை அடிப்படையில் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செயற்கை நிறமிகள் சேர்த்து கலப்பட டீத்தூள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உணவு பொருட்கள் கலப்படம் குறித்து  94440 42322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோடீஸ்வரன், விஜயராஜா, பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News