செய்திகள்
கொரோனா பரிசோதனைக்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் வரிசையில் நிற்கும் வடமாநில தொழிலாளர்கள்.

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்

Published On 2021-08-05 07:51 GMT   |   Update On 2021-08-05 07:51 GMT
கடந்த மாதம் திருப்பூருக்கு வந்த 18 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்:

தொழில்நகரமான திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு பலரும் வேலை தேடி வருகிறார்கள்.  

தற்போது வடமாநில தொழிலாளர்கள் 3 லட்சம் பேரும், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சம் பேரும் என மொத்தம் 8 லட்சம் தொழிலாளர்கள் மாநகரில் இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 

இதன் பின்னர் கடந்த மாதம்  அறிவிக்கப்பட்ட தளர்வின் காரணமாக பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. இதனால் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்ப வர தொடங்கியுள்ளனர்.

இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூருக்கு ரெயில்களில் வருகிற வடமாநில தொழிலாளர்களுக்கு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

மேலும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை நிறுவன விடுதிகள் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

அந்த வகையில் கடந்த மாதம் திருப்பூருக்கு வந்த 18 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 32 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவித்து சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது.  

தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் பல மாநிலங்களை கடந்து வருவதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News