செய்திகள்
கோப்புபடம்

மடத்துக்குளத்தில் சாலையை ஆக்கிரமித்த புதரால் விபத்து அபாயம்

Published On 2021-08-04 08:10 GMT   |   Update On 2021-08-04 08:16 GMT
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள வெள்ளைக்கோடு வரை முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.
மடத்துக்குளம்:

கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தை கேரளா உள்ளிட்ட அருகிலுள்ள மாநிலத்தை சார்ந்தவர்களும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளவர்களும் பயன்படுத்துகின்றனர். நிமிடத்திற்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் பல இடங்களில் முறையான பராமரிப்புகள் இல்லை. மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள வெள்ளைக்கோடு வரை முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
 
தெருவிளக்குகள் போதிய வெளிச்சம் வழங்காத இந்த இடத்தில் இரவுநேரம் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் முட்புதர்கள் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள்  சாலையோரம் வேகமாக வரும் போது, இந்த புதரால் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். 

சில நேரம் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் இடது பக்கமாக ஒதுங்கும் போது இதிலுள்ள முட்களால் காயமடைகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த புதர்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News