செய்திகள்
மழை

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை

Published On 2021-07-29 05:39 GMT   |   Update On 2021-07-29 05:39 GMT
மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்றும், இன்று காலையும் தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. குற்றால அருவி கரையோரப் பகுதிகளிலும் தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை பெய்த மழையில் அதிகபட்சமாக ஆய்க்குடி மற்றும் குண்டாறு பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

அடவிநயினார், கடனா நதி அணை பகுதியில் 3 மில்லி மீட்டரும், தென்காசி செங்கோட்டை சிவகிரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் குற்றாலத்தில் உள்ள கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழையினால் தென்காசி மாவட்டத்திலுள்ள அடவிநயினார் அணை, குண்டாறு அணை ஆகிய இரண்டும் நிரம்பி வழிகிறது.

கடனாநதி-76, ராமநதி 73.50, கருப்பாநதி 68.96 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
Tags:    

Similar News