செய்திகள்
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்த போது எடுத்த படம்.

கரூர் அரசு கலைக்கல்லூரியில் இலவச சேவை மையம் தொடக்கம்

Published On 2021-07-29 01:26 GMT   |   Update On 2021-07-29 01:26 GMT
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கரூர் அரசு கலைக்கல்லூரியில் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கரூர்:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021-22) விண்ணப்பங்களை இணையதளத்தில் கடந்த 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி ஆகும். இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் கம்ப்யூட்டர் சென்டர்களில் கட்டணம் செலுத்தி மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பங்களை பதிவு செய்ய இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி தலைமையில், கணினி அறிவியல் துறை ஆய்வகத்தில் இணையதள வசதியுடன் 20 கம்ப்யூட்டர்களுடன் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கரூர் அரசு கலைக்கல்லூரி கணினிஅறிவியல் துறை தலைவர் தங்கதுரை கூறுகையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய 5 பேராசிரியர்களும், என்ஜினீயரிங் கல்லூரிக்கு 3 பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் இந்த சேவை மையத்தை அணுகி தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். நிரந்தர மதிப்பெண் பட்டியல் வந்தவுடன், அரசின் உத்தரவுக்கு பின்னர் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

கரூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான சேவை மையமாக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று வரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 26 பேரும், என்ஜினீயரிங் கல்லூரிக்கு 3 பேரும் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர்.

மற்ற இடங்களில் பதிவு செய்யும் போது ஒருசில தவறுகள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களுடைய வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளதால், மாணவர்கள் இந்த இலவச சேவை மையத்தை அணுகி, தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம், என்றார்.

Tags:    

Similar News