செய்திகள்
தொலைபேசி மூலம் குறைதீர்க்கும் பணியை கலெக்டர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தப்படம்

தொலைபேசி மூலம் அதிகாரிகளிடம் குறைகளை தெரிவித்த பொதுமக்கள்

Published On 2021-07-26 09:36 GMT   |   Update On 2021-07-26 09:36 GMT
ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்காக வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், சட்டமன்ற தேர்தல் காரணமாகவும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக  ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை போட்டுச்சென்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். குடும்ப பிரச்சினை, பட்டா, சொத்து, குடிநீர் பிரச்சினை என மனு கொடுக்க கூட்டமாக குவிகின்றனர். 

இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கும்  பொருட்டு பொதுமக்கள் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தெரிவிக்க சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக திங்கட்கிழமைதோறும் (0421-2969999) என்ற தொலைபேசி எண்ணிற்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை  பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்திருந்தார். அதற்கான பணி இன்று கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. அப்பணியை கலெக்டர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

இதனிடையே இந்த தகவல் தெரியாதவர்கள் வழக்கம் போல இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களிடம் தற்போதையை நடைமுறை குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி மனுக்களை முறையாக பதிவு செய்து அனுப்பி வைத்தனர். 

இதே போல் தொலைபேசி வாயிலாகவும் பொதுமக்கள் குறைகளை தெரிவித்தனர். அவை முறையாக பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்திட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News