செய்திகள்
கோப்புபடம்

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் 2 தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் - சுகாதாரத்துறை

Published On 2021-07-25 12:43 GMT   |   Update On 2021-07-25 12:43 GMT
தொழிற்சாலைகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தொழில் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், நிறுவனங்களுக்கு வரும் பணியாளர்களுக்கு வெப்பமாணி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். அப்பொழுது, கொரோனா அறிகுறியான காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தால் கண்காணித்து கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும்.

வெப்பமாணி மூலம் பரிசோதனை செய்யும் பொழுது அதிகபட்சமாக 99 பாரன்ஹீட் அல்லது 37டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். மேலும், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

முககவசம் அணியாமல் பணியாளர்கள் இருந்தால் உடனடியாக அலுவலகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். அதனை தொடர்ந்து சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். அலுவலகத்தில் ஒருவருக்கு ஒருவர் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்தில் நுழைவிடம் உட்பட ஆங்காங்கே கிருமிநாசினி வைத்து, அவ்வப்பொழுது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

உணவுக்கூடம், கேன்டீன் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து, அவ்வப்பொழுது சுத்தம் செய்ய வேண்டும். அதிகப்படியானோர் கூடுவதையும், கூட்டம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் அலுவலர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களை அழைத்து செல்லும் வாகனத்திற்கு அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தியுள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களை அல்லது 10 ஆயிரம் சதுர அடியை கொண்டு இயங்கும் நிறுவனங்களில் கட்டாயம் சுகாதார ஆய்வாளர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். இவை தவிர கொரோனாதொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News