செய்திகள்
கோப்புபடம்

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வாங்கி தருவதாக பணம் மோசடி - சேலத்தை சேர்ந்த டிப்-டாப் ஆசாமி கைது

Published On 2021-07-24 00:15 GMT   |   Update On 2021-07-24 00:15 GMT
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த சேலம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சோழவந்தான்:

சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண்ணின் குழந்தை கடந்த மாதம் பாம்பு கடித்து இறந்து விட்டது. இந்த நிைலயில் டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் தமிழ்ெசல்வியை சந்தித்து, தான் வருவாய் அதிகாரி என்றும், பாம்பு கடித்து இறந்த உங்கள் குழந்தைக்கு அரசின் நிவாரண தொகை ரூ.7½ லட்சத்தை வாங்கி தர ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகும் என கூறி உள்ளார்.

அதன்பிறகு முன்பணமாக ரூ.6 ஆயிரத்தை வாங்கி கொண்டு குழந்தை பற்றிய சில விவரங்களை கேட்டு விட்டு அங்கிருந்து சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த அவர் மேலும் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் தான் தன்னால் நிவாரண தொகை வாங்கி தர முடியும் என கூறி இருக்கிறார்.

இதில் சந்தேகம் அடைந்த தமிழ்செல்வி மற்றும் அக்கம், பக்கத்தினர் இது குறித்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் ஒரு மோசடி ஆசாமி என தெரிய வந்தது. அவரது பெயர் பிரபாகரன்(வயது 37). சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தை சேர்ந்த கொட்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

இது போல் விபத்து செய்திகளை அறிந்து பல்வேறு ஊர்களில் அரசிடம் நிவாரணம் பெற்று தருவதாக ஆயிரக்கணக்கில் பணம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் மேலும் அவர் எங்கெல்லாம் இது போன்று மோசடி செய்துள்ளார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News