செய்திகள்
திருப்பூரில் மாட்டுவண்டி மூலம் ஆடைகள் ஏற்றி செல்லப்பட்டதை படத்தில் காணலாம்.

திருப்பூரில் சரக்குகளை கையாள மாட்டுவண்டிகள்-பெட்ரோல் விலை உயர்வால் சிக்கன நடவடிக்கை

Published On 2021-07-20 10:32 GMT   |   Update On 2021-07-20 10:32 GMT
குறைந்த கட்டணமே வாங்குவதால் சிறிய நிறுவனத்தினர் குறைந்த செலவில் ஆடை, துணி ரகங்களை கொண்டு செல்ல மாட்டுவண்டிகளை நாடி வருகின்றனர்.
திருப்பூர்:

பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் ஏறிக் கொண்டே செல்கின்றன. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103, டீசல் ரூ.95 என உச்சத்தை தொட்டுவிட்டது. இதனால் சரக்கு வாகன கட்டணங்களும் உயர தொடங்கி உள்ளன. 

திருப்பூரில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பனியன் துணி, ஆயத்த ஆடை கட்டுக்களை கொண்டு செல்வதற்கு இருசக்கர வாகனம், ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். எரிபொருள் விலை உயர் வால் செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் சில சிறு குறு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோவுக்கு பதிலாக மாட்டு வண்டிகளை வாடகைக்கு அமர்த்த தொடங்கிவிட்டன. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் நகர வீதிகளில் ஏராளமான மாட்டுவண்டிகள் வலம் வந்தன.

சரக்கு ஆட்டோக்கள் வந்த பின் மாட்டுவண்டிகளை காண்பதே அரிதாகி விட்டது. சில இடங்களில் குடிநீர், உணவு பொருட்கள் ஏற்றிச்செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. பின்னலாடை உற்பத்தியாளர்களின் சிக்கன நடவடிக்கைகளால் தற்போது பனியன் துணி, ஆடை ஏற்றிச்செல்லும் ஒற்றை மாட்டு வண்டிகளை திருப்பூரில் பரவலாக காண முடிகிறது. 

இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர் தண்டபாணி கூறியதாவது:-

பக்கத்தில் உள்ள பகுதி களுக்கு சரக்குகளை மாட்டு வண்டியில் கொண்டு செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 முதல் ரூ.45 வரை வாங்குகிறோம். புது பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை இரும்பு கம்பிகள் உள்ளிட்ட சரக்குகளை கொண்டுசெல்வதற்கு ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டணம் வாங்குகிறோம்.  

குறைந்த கட்டணமே வாங்குவதால் சிறிய நிறுவனத்தினர் குறைந்த செலவில் ஆடை, துணி ரகங்களை கொண்டு செல்ல மாட்டுவண்டிகளை நாடி வருகின்றனர். இது என்னை போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இந்த நிலை நீடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News