செய்திகள்
திருப்பூர் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்.

திருப்பூர் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்

Published On 2021-07-14 11:16 GMT   |   Update On 2021-07-14 11:16 GMT
முழு விசாரணைக்கு பிறகே வாகனங்களையும், அதில் பயணிப்போர் அனைவரையும் உடுமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
திருப்பூர்:

கேரள மாநிலம் மறையூர், மூணாறில் இருந்து தமிழக எல்லையான சின்னாறு வழியாக திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு பல்வேறு பணிகளுக்காக கேரள மக்கள் வந்து செல்கின்றனர்.  

மேலும்  தமிழகத்தில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கேரளா கொண்டு செல்லப்படுகிறது.
 
கொரோனா தொற்று பரவல் காரணமாக உடுமலை-மூணாறு சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அவசர தேவைக்காக வரும் வாகனங்கள் ஒன்பதாறு தமிழக-கேரள சோதனை சாவடியில் தணிக்கை செய்யப்பட்டது.

வாகன ஓட்டுனர்கள், பயணிகளுக்கு, மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தற்போது தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 'இ-பாஸ்' பெற்ற வாகனங்கள், கேரளாவில் இருந்து உடுமலைக்கு வரத் துவங்கியுள்ளன.

ஆனால் தமிழக எல்லையில் வாகன ஓட்டுனர்களுக்கு எவ்வித பரிசோதனையும் செய்யப்படுவதில்லை.

கேரளாவில் இருந்து வரும் பொதுமக்கள் உடுமலை நகரிலுள்ள சந்தை, மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். 
இதனால் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்குமோ? என்ற அச்சம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. 

மேலும் கேரளாவில் ஜிகா வைரஸ் பரவுவதால் அந்த வைரசும் பரவி விடுமோ? என்ற பீதியில் உடுமலை மக்கள்  உள்ளனர். எனவே சுகாதாரத் துறையினர்  மாநில எல்லையை கடந்து வருவோரின் உடல்வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். 

வாகனங்களில் வருவோரிடம், 'இ-பாஸ்' உள்ளதா என பரிசோதித்து எங்கிருந்து, எங்கு செல்கிறார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். 
முழு விசாரணைக்கு பிறகே வாகனங்களையும், அதில் பயணிப்போர் அனைவரையும் உடுமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதைத்தொடர்ந்து அங்கு வனத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர்  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வாகனங்கள் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகின்றன.  

குறிப்பாக அவிநாசி வழித்தடத்தில் நம்பியூர், புளியம்பட்டி வழியாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் திருப்பூருக்குள் நுழைகின்றன.

இந்த வாகனங்களை கண்காணிக்க புளியம்பட்டி சாலையில் ஆலத்தூர் மேடு பகுதியிலும், நம்பியூர் சாலையில் மொட்டணம் பகுதியிலும் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News