செய்திகள்
கோப்புபடம்

ஓசூரில் போலீசார் வாகன சோதனை: ரூ.1.18 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது

Published On 2021-07-12 11:01 GMT   |   Update On 2021-07-12 11:01 GMT
ஓசூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சரக்கு வேனில் கடத்தப்பட்ட ரூ.1.18 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஓசூர் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமுதா மற்றும் போலீசார் ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 10 ஆயிரத்து 500 ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா 12 பெட்டிகள் உள்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன் டிரைவர் மற்றும் உடன் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் பெங்களூரு தொட்டமாவள்ளி பகுதியை சேர்ந்த அஜாஸ் பாஷா (வயது 32) என்பதும், மற்றொருவர் அஞ்செட்டியை சேர்ந்த யாரப் (32) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News