செய்திகள்
சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குவிந்த மக்கள்

Published On 2021-07-05 01:51 GMT   |   Update On 2021-07-05 09:39 GMT
உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரை 47 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்துவரும் நிலையில் ஊரடங்கில் தொடர்ந்து தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரை 47 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடற்கரை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். குறிப்பாக முதியோர் மகிழ்ச்சி அடைந்தனர். அதேவேளை, சர்வீஸ் சாலையில் மட்டுமே பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். கடற்கரை மணற்பரப்புக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.



இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று காலை முதலே மெரினா கடற்கரை நோக்கி மக்கள் படையெடுத்து வந்தனர். இதனால் சர்வீஸ் சாலை முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்தநிலையில் மாலை வேளையில் தடையை மீறி மணற்பரப்பில் மக்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமானது.

இதனால் இது கொரோனா தாக்கம் நிலவும் காலமா அல்லது காணும் பொங்கல் தினமா என்று யோசிக்கும் அளவுக்கு தடையை மீறி பொதுமக்கள் மெரினாவில் உற்சாகமாக வலம் வரத் தொடங்கினர். கடல் அலையில் உற்சாகமாக நனைந்தும், குளித்தும் ஆர்ப்பரித்தனர். இத்தனை நாட்களாக மனித நடமாட்டமின்றி வெறிச்சோடி இருந்த கடற்கரை மணற்பரப்பு நேற்று ஒரே நாளில் வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்பட்டது.

அதையடுத்து போலீசார், மணற்பரப்பில் குவிந்திருந்த பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகுதான் கடற்கரையில் ஓரளவு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. தொடர்ந்து போலீசார் போராடி மக்களை அங்கிருந்து வெளியேறச் செய்தனர்.

‘கொரோனா தாக்கம் குறைந்துகொண்டிருக்கிறது என்றாலும், இன்னும் முற்றிலும் ஓயவில்லை. இந்தநிலையில் இதுபோல மக்கள் ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் எங்கே மறுபடியும் கொரோனா அலை வேகம் எடுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே கடற்கரையில் மக்கள் கூட்டம் சேராதவாறு போலீசார் தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News