செய்திகள்
கோப்புப்படம்

ஊரடங்கால் 2-ம் தர துணி விற்பனை பாதிப்பு

Published On 2021-07-02 07:45 GMT   |   Update On 2021-07-02 07:45 GMT
ஊரடங்கால் மூடப்பட்டிருந்த இரண்டாம் தர துணி வர்த்தக நிறுவனங்கள் தளர்வு காரணமாக தற்போது இயங்க துவங்கியுள்ளன.
திருப்பூர்:

திருப்பூர்-பி.என்., ரோடு நெசவாளர் காலனி பகுதியில் இரண்டாம் தர துணி வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. குறு, சிறு வர்த்தகர்கள் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் மீதமாகும் துணி, கட்டிங் வேஸ்ட்டை வாங்கி உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம் விற்கின்றனர்.

ஊரடங்கால் மூடப்பட்டிருந்த இரண்டாம் தர துணி வர்த்தக நிறுவனங்கள் தளர்வு காரணமாக தற்போது இயங்க துவங்கியுள்ளன.இந்தநிலையில் ஊரடங்கால் 50 நாட்களாக மூடப்பட்டிருந்ததால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளனர். 

இதுகுறித்து பனியன் துணி வியாபாரிகள் சங்க செயலாளர் முருகேசன் கூறியதாவது:

நெசவாளர்,காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரண்டாம் தர துணி வர்த்தக குடோன்கள் உள்ளன. 70 சதவீத வர்த்தகர்கள், ஏற்றுமதி நிறுவனங்களில் மீதமாகும் துணி, கட்டிங் வேஸ்ட் பெற்று விற்கின்றனர். 30 சதவீத வர்த்தகர்கள், நூல் கொள்முதல் செய்து துணி தயாரித்து விற்கின்றனர்.

கடந்த 50 நாட்களாக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் வங்கி கடன், வீடு, குடோன் வாடகை செலுத்த முடியால் குடும்ப செலவினங்களை சமாளிக்க முடியாமல் இரண்டாம் தர வர்த்தகர்கள் தவிக்கின்றனர். கடந்த ஆண்டு கடன் செலுத்த கூடுதல் அவகாசம் போன்ற சலுகைகளை அரசு அறிவித்தது. இந்தாண்டு அத்தகைய சலுகைகள் ஏதுமில்லை. நிறுவனங்களை திறக்க எப்போது அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தற்போது மீண்டும் இயங்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் இழந்த வர்த்தகத்தை விரைவில் மீட்டெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையுடன் வர்த்தகத்தில் முனைப்பு காட்டிவருகிறோம்.

உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 33 சதவீத தொழிலாளருடனேயே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.பஸ் போக்குவரத்து துவக்காததால், தொழிலாளர் வருகை குறைந்துள்ளது. இதனால் இரண்டாம் தர துணி வர்த்தகம் 10 சதவீத அளவே நடக்கிறது. கையுறை, முககவசம் தயாரிப்புக்காக மட்டுமே நிறுவனங்கள் துணி கொள்முதல் செய்கின்றன. உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளருடன் இயங்க அரசு அனுமதிக்கவேண்டும். பஸ் போக்குவரத்தை துவக்கவேண்டும். இதன்மூலம்  திருப்பூரில் நலிவடைந்த நிலையில் உள்ள இரண்டாம் தர துணி வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News