செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் மாதிரி ஆடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-06-29 06:50 GMT   |   Update On 2021-06-29 06:50 GMT
ஆடை உற்பத்தி நிறுவனங்களை போன்று ஜாப் ஒர்க் நிறுவனங்களும் மீண்டும் இயக்கத்துக்கு வந்துள்ளன.
திருப்பூர்:

ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து திருப்பூரில் ஏற்றுமதி ஆடை உற்பத்தி மற்றும் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளன. 

இந்தநிலையில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளிலிருந்து கோடை கால ஆடை தயாரிப்புக்கான விசாரணைகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்காக சாம்பிள் ஆடை தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை ஆர்டர்களாக மாற்றி கடந்த கால இழப்புகளை ஈடு செய்வதற்கான முயற்சியில் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. 

இதனிடையே ஆர்.ஓ.டி.டி.இ.பி., திட்டம், கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆடை மதிப்பில் எத்தனை சதவீத சலுகை என்கிற வழிகாட்டுதல்கள் வெளியிடப்படாததால் இந்த திட்டம் பயனற்றதாக உள்ளது. புதிய திட்டத்துக்கு உயிர் கொடுக்கவேண்டும். அதுவரை, பழைய ஆர்.ஓ.எஸ்.டி.சி.எல்., திட்டத்தை தொடர வேண்டும் என்பது ஏற்றுமதியாளர் கோரிக்கையாக உள்ளது. 

மேலும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட தொடங்கியுள்ளன. அவர்களும் புதிய ஆர்டர்களை பெறும் பணிகளில்  ஈடுபட உள்ளன.ஆனால் 33 சதவீத தொழிலாளருடன் ஆடை உற்பத்தியை திறம்பட மேற்கொள்ள முடியாது என்பதால் 100 சதவீத தொழிலாளரை பணி அமர்த்திக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பது அந்த துறையினரின் கோரிக்கையாக உள்ளது. 
 
இணைப்புசங்கிலி போல பின்னலாடை துறை நிட்டிங், டையிங், பிளீச்சிங், ஸ்டீம் காலண்டரிங், காம்பாக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, கட்டிங், தையல், காஜாபட்டன், செக்கிங், அயர்னிங் போன்ற ஜாப்ஒர்க் துறைகளை அங்கமாக கொண்டு இயங்குகிறது.

இந்தநிலையில் ஆடை உற்பத்தி நிறுவனங்களை போன்று ஜாப் ஒர்க் நிறுவனங்களும் மீண்டும் இயக்கத்துக்கு வந்துள்ளன. துணி உற்பத்தி, சாயமேற்றுதல், ஆடை தயாரிப்பு மேற்கொண்டு வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்ற பின்னலாடை துறையினருக்கு கை கொடுக்க ஜாப்ஒர்க் நிறுவனங்கள் தயாராகிவிட்டன. தொழிலாளர் பற்றாக்குறை, நிதி நெருக்கடி ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் கட்டணங்களை உடனுக்குடன் வழங்கி, நடைமுறை மூலதன சிக்கல்கள் ஏற்படாமல் கைகொடுக்க வேண்டும் என்கின்றனர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள். 

2 கொரோனா அலைகளை நீந்தி கடந்துள்ளது திருப்பூர் பின்னலாடை துறை. 3-வது அலை குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. எனவே மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். தொற்று இல்லாத திருப்பூரை உருவாக்கி தொழில் வளர்ச்சியில் இனியரு தடைக்கல் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
Tags:    

Similar News