செய்திகள்
அறுவடை செய்யாமல் இருக்கும் வாழை இலைகள்.

ஊரடங்கால் முடங்கிய வாழை இலை விற்பனை-விவசாயிகள் தவிப்பு

Published On 2021-06-19 07:23 GMT   |   Update On 2021-06-19 07:23 GMT
அதிக காற்று வீசும் ஆடி மாதம் போன்ற பருவங்களில் காற்றினால் இலைகள் அதிக அளவில் கிழிந்து சேதமாகும்.
மடத்துக்குளம்,

உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் ஆண்டுப் பயிரான வாழை, கரும்பு போன்றவற்றை பல விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் இலை விற்பனையைக் கருத்தில் கொண்டு குமரலிங்கம் பகுதியில் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் விற்பனை முடங்கி கடும் இழப்பை சந்தித்துள்ளனர். 

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 

வாழைக்காய் மற்றும் வாழைப் பழங்களுக்காக வாழை சாகுபடி செய்யும்போது வருமானம் பெறுவதற்கு ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும். ஆனால் இலைக்காக வாழை சாகுபடி செய்யும்போது 5 மாதங்களிலிருந்தே வருமானம் பெறத் தொடங்கலாம். அத்துடன் காய்கறி சாகுபடியைப் போலவே தினசரி வருமானம் தரக்கூடியது என்பதால் இலை வாழை சாகுபடியைத் தேர்வு செய்தோம். பூவன், கற்பூரவள்ளி, மொந்தன், கதலி, சக்கை, வயல் வாழை போன்ற ரகங்கள் இலை உற்பத்திக்கு சிறந்ததாகும்.

ஒரு ஏக்கரில் 1600 வாழைகள் வரை நடவு செய்யலாம். ஒரு ஏக்கரில் தினசரி 1000 இலைகளுக்கு மேல் வெட்ட முடியும். அதிக காற்று வீசும் ஆடி மாதம் போன்ற பருவங்களில் காற்றினால் இலைகள் அதிக அளவில் கிழிந்து சேதமாகும். வாழைகளை நெருக்கமாக நடவு செய்வதன் மூலமும் வேலிப்பயிராக அகத்தி உள்ளிட்ட மரங்களை வளர்ப்பதன் மூலமும் இலைகள் சேதமடைவதைத் தடுக்க முடியும்.

வாழை இலைகளைப் பொறுத்தவரை உணவகங்களில் சாப்பிடுபவர்களுக்கு உணவு பரிமாறுவதற்காகவும், பார்சல் கட்டுவதற்கும் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத்தடை விதித்த போது இலை விற்பனை கணிசமாக உயர்ந்தது. ஆனால் காலப்போக்கில் அதிகாரிகள் கெடுபிடி தளர்ந்ததால் மீண்டும் உணவகங்களில் பார்சல் கட்டுவதற்கு பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். 

தற்போது கொரோனா பரவலை  கட்டுப்படுத்தும் விதமாக உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இலைகளை வாங்குவதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருமணம், திருவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது இலைகளுக்கான தேவை அதிக அளவில் இருக்கும். இதனால் சாதாரண நாட்களில் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 1000-க்கு விற்பனை செய்யப்பட்டால் சுப முகூர்த்த தினங்களில் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான சுப நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒருசில நிகழ்ச்சிகள் வீட்டளவில் எளிமையாக நடத்தப்படுகிறது.
எனவே வாழை இலைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல் பகுதிகளுக்கு வாழை இலைகளை வாங்கிச் செல்வதற்கு வியாபாரிகள் வரவில்லை. எனவே வேறு வழியில்லாமல் இலைகளை வெட்டாமல் அப்படியே மரங்களிலேயே விட்டு விட்டோம். இதனால் இலைகள் கிழிந்தும், காய்ந்தும் வீணாகி வருகிறது.  இதனால் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Tags:    

Similar News