செய்திகள்
காயம்

காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2021-06-17 09:21 GMT   |   Update On 2021-06-17 09:21 GMT
மது போதையில் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் வாலிபர் ஒருவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டன. டாஸ்மாக் மதுக்கடையும் மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறையத்தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

அதன்படி கடந்த 14-ந் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்துக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுக்கடையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த கால கட்டத்தில் அடிதடி, மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் குறைந்து காணப்பட்டன.

தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அடிதடி-மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் சென்னையில் காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் சராசரியாக காயம் அடைந்த 30 பேருக்கு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. கடந்த 15-ந்தேதி மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 70 சதவீதம் பேர் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்தவர்கள் ஆவர்.

மதுப்பிரியர் ஒருவர் ஆஸ்பத்திரியில் துப்புரவாளர்கள் வைத்திருந்த பினாயிலை தண்ணீர் என்று நினைத்து குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. மேலும் கணவர் மது குடித்துவிட்டு வந்து தாக்கியதால் ஏற்பட்ட காயத்துடனும் பெண்கள் சிலர் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர்.

மது போதையில் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் வாலிபர் ஒருவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதே போல தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி பலியாவோர் எண்ணிக்கையும் 2 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் தினமும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களில் 12 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் வரை விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 அல்லது அதற்கு குறைவாகவே இருந்தது. கடந்த 14-ந்தேதி மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News