செய்திகள்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளுக்கு நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படும் காட்சி.

கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்

Published On 2021-06-14 03:18 GMT   |   Update On 2021-06-14 03:18 GMT
காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தேவையான வலை, டீசல் மீன்களைப்பதப்படுத்தி வைக்க ஐஸ் மற்றும் மூலப்பொருட்களை படகுகளில் ஏற்றி வருகின்றனர்.
திருவொற்றியூர்:

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைகிறது.

இதனால் மீண்டும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகிறார்கள். ஆழ் கடலில் சென்று மீன் பிடிக்க தேவையான வலை, டீசல் மீன்களைப்பதப்படுத்தி வைக்க ஐஸ் மற்றும் மூலப்பொருட்களை படகுகளில் ஏற்றி வருகின்றனர்.

ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் திரும்பி வந்து அவர்கள் பிடித்த மீன்களை மொத்த வியாபாரிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்வார்கள்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யும் இடத்தில் கூட்டம் சேராமல் இருக்க 3 ஆக பிரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்தனர்.

வியாபாரிகள் சமூக இடைவெளியுடன் மீன் வாங்கி செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி சார்பில் தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில் ராட்சத எந்திரங்கள் மூலம் விசைப்படகுகள், சிறிய படகுகள், மீன்பிடி தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

புதிய மீன் விற்பனை கூடம், பழைய விற்பனை கூடம் என அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் விசை படகுகளில் ஆழ் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கச்செல்பவர்கள் ஒரு வாரத்துக்கு பின்பு அவர்கள் கரை திரும்பி வரும்போது அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு வரும் எனவும், இதனால் மீன் விலை சற்று குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் வரவில்லை. அதேபோன்று மூலப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது. எனவே குறைந்த அளவு விசைப்படகுகள் தான் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்.

எனவே விசைப்படகு மீனவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 1800 லிட்டர் டீசல் மானியத்தை 18 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். பைபர் படகுகளுக்கு வழங்கப்படும் 400 லிட்டர் டீசலை 4 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது போன்று மீனவர்களுக்கும் மீன்பிடிக்க செல்லும் போது வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News