செய்திகள்
பனியன் நிறுவனத்தில் 10சதவீத தொழிலாளர்களுடன் ஆடை தயாரிப்பு பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

வெளிநாட்டு ஆர்டர்களை முடிப்பதில் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு சிக்கல்

Published On 2021-06-11 09:56 GMT   |   Update On 2021-06-11 14:21 GMT
அடுத்த சீசனுக்கான ஆர்டர்களுக்கு மாதிரி ஆடை தயாரிப்பு கூட பலவீனமடைந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலமாக ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வில் திருப்பூரில் ஏற்றுமதிக்கான ஆணை மற்றும் உரிய ஆவணம் உடைய ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத  தொழிலாளர்களுடன் நிறுவனங்களை இயக்கலாம் எனவும், அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருப்பூரில் ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் குறைந்த தொழிலாளருடன் இயக்கப்படுவதால் மாதிரி ஆடைகள் கூட தயாரிக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கூடுதல் தொழிலாளருடன் பணிபுரிய அனுமதிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முழு ஊரடங்கு காரணமாக கடந்த 4 வாரங்களாக திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கவில்லை. தற்போது 10 சதவீத தொழிலாளருடன் நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளரை கொண்டு வெளிநாட்டு வர்த்தகர்கள் வழங்கியுள்ள ஆர்டர்களை முடித்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த சீசனுக்கான ஆர்டர்களுக்கு மாதிரி ஆடை தயாரிப்பு கூட பலவீனமடைந்துள்ளது.ஏற்றுமதி நிறுவனங்கள் கூடுதல் தொழிலாளருடன் பணிபுரியும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். குறுகிய காலத்துக்குள் அனைத்து தொழிலாளருக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். இ.எஸ்.ஐ., மூலம்  தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்க கோரி, பிரதமர் மற்றும் மத்திய தொழில் துறை அமைச்சருக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம். எங்களது இந்த கோரிக்கையை, தமிழக முதல்வரும், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றிவைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News