செய்திகள்
கோப்புபடம்

தணிக்கை-ஆடை உற்பத்தி நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

Published On 2021-06-08 05:04 GMT   |   Update On 2021-06-08 05:04 GMT
தணிக்கைகளில் நேரடியாக பங்கு பெற வேண்டுமென திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் பொதிகை மனிதவள மேம்பாட்டு அமைப்பு சார்பில் மெய்நிகர் தணிக்கை குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கை துவக்கிவைத்து பெங்களூரு ரீடிபைன் நிறுவன இயக்குனர் ஸ்ரீதர் ராஜகோபால் பேசுகையில் ‘’ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஆர்டர் வழங்கும் வெளிநாட்டு வர்த்தகர்கள் தொற்று பரவல் காரணமாக  நேரடி தணிக்கை நடத்த இயலாத நிலை உள்ளது.

மென்பொருட்கள் உதவியுடன் ஆன்லைனில் மெய்நிகர் தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும், தணிக்கையில் இத்தகைய வழிமுறைகளே பின்பற்றப்படலாம்.இதுகுறித்த நுணுக்கங்களை அறிந்து வைத்திருத்தல் அவசியம்‘’ என்றார். தணிக்கையாளர் பிரவீன் கூறியதாவது:-

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் மேற்கொள்ளும் தணிக்கைகள், நமது நாட்டு நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும். இதை  ஒவ்வொரு ஆடை உற்பத்தி நிறுவன மனிதவள துறையினரும் நன்கு உணரவேண்டும். தணிக்கையை தோல்வியடைய செய்து  நிறுவனத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. நிறுவனங்கள்-தணிக்கையாளர் இடையே நிலவும் முரண்பாடுகள் களையப்படவேண்டும்.

ஆடை உற்பத்தி நிறுவன உயர்மட்ட நிர்வாகிகள், தணிக்கைகளில் நேரடியாக பங்குபெறவேண்டும். எல்லா நிலையிலும் வெளிப்படை தன்மை தேவை சமர்ப்பிக்கும் ஆவணங்கள் உண்மையானவையாக இருக்க வேண்டும்.

தணிக்கை சார்ந்த பிரச்சினைகளை முன்னரே கணிக்க தவறக்கூடாது. துறைவாரியான ஆய்வுகளில் போதுமான அளவு கவனம் செலுத்த வேண்டும். இவற்றை கடைபிடித்தால் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மிக எளிதாக மெய்நிகர் தணிக்கைகளை எதிர்கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் பொதிகை அமைப்பு இயக்குனர் சுந்தரேசன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News