செய்திகள்
கைது

மது பாட்டில்கள் கடத்தல்- 28 பேர் கைது

Published On 2021-06-01 11:29 GMT   |   Update On 2021-06-01 11:29 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து ஆந்திராவிலுள்ள மதுக்கடைகளில் சில்லரையாகவும், மொத்தமாகவும் மதுபாட்டில்களை வாங்கி கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:

கொரோனா தொற்று 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மது கிடைக்காததால் மது பிரியர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இவர்கள் தற்போது ஆந்திராவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதாவது ஆந்திராவிலும் கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மதுக்கடைகள் மற்றும் இதர கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆந்திராவில் உள்ள மது கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து ஆந்திராவிலுள்ள மதுக்கடைகளில் சில்லரையாகவும், மொத்தமாகவும் மதுபாட்டில்களை வாங்கி கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வருகின்றனர். இதை தடுக்க ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சிட்டிபாபு, முரளி ஆகியோர் போலீசாருடன் ஊத்துக்கோட்டை நகர எல்லைகளில் உள்ள 2 சோதனை சாவடிகளில் மாறுவேடம் அணிந்து கண்காணித்து வருகின்றனர்.

இதன் பலனாக கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 1,000 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக 28 பேரை போலீசார் கைது செய்தனர். மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்திய 3 கார்கள், 25 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
Tags:    

Similar News