செய்திகள்
கோப்பு படம்

நன்னிலம், பேரளம் பகுதிகளில் 200 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2021-05-28 17:19 GMT   |   Update On 2021-05-28 17:19 GMT
நன்னிலம், பேரளம் பகுதிகளில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 200 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நன்னிலம்:

கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறுபவர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

நன்னிலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கங்களாஞ்சேரி, சன்னாநல்லூர் ஆகிய பகுதிகளிலும், பேரளம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பூந்தோட்டம், பேரளம், கீரனூர் ஆகிய பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு அதில் வருபவர்களிடம் எந்த காரணத்துக்காக செல்கிறீர்கள்? என போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே வந்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

வெளி மாவட்ட வாகனங்கள் என்றால் இ-பதிவு உள்ளதா? என விசாரணை நடத்தப்படுகிறது. நன்னிலம், பேரளம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களின் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News