செய்திகள்
பாலகிருஷ்ணனிடம் மருந்து, மாத்திரைகளை வழங்கிய கிராமிய காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த்.

மு.க.ஸ்டாலின் உத்தரவால் அபராத தொகையை திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்ட போலீஸ் அதிகாரி

Published On 2021-05-16 04:46 GMT   |   Update On 2021-05-16 04:46 GMT
திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டையில் மனவளர்ச்சி குன்றிய மகனுக்காக மருந்து வாங்க சென்றவரிடம் போலீசார் அபராத தொகை வசூலித்த சம்பவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது.

திருவள்ளூர்:

ஊரடங்கு அமலில் இருப்பதால் ரோட்டில் தேவையின்றி சுற்றுவோரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கிறார்கள்.

போலீசாரிடம் பிடிபடும் பலர் மருந்து வாங்க செல்வதாக கூறுகிறார்கள். ஏதாவது ஒரு மருந்து சீட்டையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். இப்படி பலர் தப்பிக்கிறார்கள்.

அவர்களில் உண்மையாகவே மருந்து வாங்க செல்பவர்கள் சிக்கி கொள்வதும் உண்டு. இதில் போலீசை முற்றிலும் குறை சொல்லவும் முடியாது.

அப்படித்தான் திருவள்ளூர் அருகில் உள்ள செவ்வாய்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (49) என்பவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனுக்காக மருந்து மாத்திரைகள் வாங்க டூவிலரில் சென்றுள்ளனர். மருந்து வாங்க ரூ.500 பணம் மற்றும் மருந்து சீட்டையும் வைத்துள்ளார்.

காக்களூர் பைபாஸ் ரோட்டில் சென்ற போது போலீசார் மடக்கி இருக்கிறார்கள். அவர் மருந்து வாங்க செல்வதாக கூறியும் போலீசார் நம்பவில்லை. தலைக்கவசம் அணியாமல் வந்ததற்காக ரூ.500 அபராதம் வசூலித்து இருக்கிறார்கள்.

இதனால் பாலகிருஷ்ணன் மருந்து வாங்க முடியாமல் வீடு திரும்பி இருக்கிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த தகவல் வைரல் ஆனதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றுள்ளது. உடனே அந்த பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் நேரில் கொடுத்து தேவையான உதவிகளை செய்யும் படி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேரில் சென்று ரூ. 500 ஐ திருப்பி கொடுத்து மருந்து மாத்திரைகளையும் வாங்கி கொடுத்துள்ளார். அதோடு தெரியாமல் நடந்த தவறுக்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் தகவல் வைரலாகி முதல்வர் நேரில் நடவடிக்கை எடுத்தது அந்த குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News