செய்திகள்
கொலை

நெல்லை அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் கொலை- வாலிபர் கைது

Published On 2021-05-13 06:43 GMT   |   Update On 2021-05-13 06:43 GMT
நெல்லை அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர், ஆடு திருட்டு வழக்கை வாபஸ் பெறாததால் வெட்டிக்கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள பேட்டை மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் கணேச பாண்டியன் (வயது54).

இவர் கொண்டாநகரம் அருகே ‘டாஸ்மாக் பார்’ நடத்தி வந்தார். நேற்று காலை இவர் டாஸ்மாக் பாரில் உள்ள அவரது அறையில் அமர்ந்து இருந்த போது, 4 பேர் கும்பல் அரிவாளுடன் உள்ளே நுழைந்து அவரை சரமாரியாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே கணேச பாண்டியன் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கணசே பாண்டியன், ஆடு திருடிய வழக்கு தொடர்பாக பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (30) என்பவர் மீது பேட்டை போலீசில் புகார் கொடுத்தார் என்றும், இதன் காரணமாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கணேச பாண்டியனை, பாஸ்கரும் அவரது நண்பர்களும் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்த நிலையில் வெளியூர் தப்ப முயன்ற பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் அப்துல் காதர் (30), விஜி (25), மைதீன் சேக் (25) ஆகிய 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பாஸ்கர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொலை செய்யப்பட்ட கணேச பாண்டியன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான ஆடு காணாமல் போய்விட்டது என்று பேட்டை போலீசில் புகார் செய்திருந்தனர். அந்த புகாரில் ஆடு திருடியதாக என் மீது புகார் செய்யப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக நான் கணேசபாண்டியனிடம் சமரசம் பேசினேன். அப்போது என் மீது கொடுத்த வழக்கையும் வாபஸ் பெறும்படி வலியுறுத்தினேன். ஆனால் கணேச பாண்டியன் அதற்கு மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது நண்பர்கள் 3 பேர் உதவியுடன் அவரை வெட்டிக்கொலை செய்தேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்று சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News