செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.74½ லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2021-05-10 01:44 GMT   |   Update On 2021-05-10 01:44 GMT
திருச்சி விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.74½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:

தற்போது கொரோனா கால கட்டமாக இருப்பதால் வேலை நிமித்தமாக ஓமன், மஸ்கட், துபாய், சார்ஜா உள்பட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்திய அரசின் சார்பில் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமானங்கள் இங்கிருந்து ஆட்கள் இன்றி சென்று அங்குள்ள இந்தியர்களை அழைத்து வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து ஒரு சிறப்பு மீட்பு விமானம் திருச்சியை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அயூப்கான் (வயது 30) என்பவர் டார்ச் லைட்டில் மறைத்து ரூ.60 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான 1¼ கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே விமானத்தில் வந்த தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த காஜா மொய்தீனை (65) சோதனையிட்டபோது அவர், தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 287 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் 2 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.74 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News