செய்திகள்
மிடாலம் பகுதியில் கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டு கரை பகுதி இடிந்துள்ளதை காணலாம்.

கருங்கல் அருகே மிடாலம் மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம்

Published On 2021-05-08 11:05 GMT   |   Update On 2021-05-08 11:05 GMT
கருங்கல் அருகே மிடாலம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடலரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கருங்கல்:

குமரி மேற்கு மாவட்ட கடலோர கிராமங்களில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கடலரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு இல்லாத பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் போது பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் கருங்கல் அருகே மிடாலம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்த வண்ணம் இருந்தன. இதனால், தடுப்பு சுவர் இல்லாத பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டு பல மீட்டர் தூரத்திற்கு கரைபகுதி இடிந்து கடலுக்குள் விழுந்த வண்ணம் உள்ளது. இதனால், கடல் ஊருக்குள் விரிவடைந்து வருகிறது.

இந்த கடற்கரை பகுதி வழியாக உதயமார்த்தாண்டத்திற்கு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக அரசு பஸ்கள் உள்பட தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

தற்போது கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் கடலரிப்பு ஏற்பட்டு கரை பகுதி உடைந்து கடலுக்குள் செல்வதுடன் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை துண்டிக்கப்பட்டால் மிடாலம் கிராமத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் நலன்கருதி கடலரிப்பை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அல்லது தூண்டில் வளைவு கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News