செய்திகள்
கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய காட்சி.

கொடைக்கானலில் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை

Published On 2021-05-08 10:58 GMT   |   Update On 2021-05-08 10:58 GMT
கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக நேற்று பகல் 12.30 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக ஆனந்தகிரி 7-வது தெரு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் சேதம் அடைந்தன. அத்துடன் அருகில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மழை காரணமாக கொடைக்கானலுக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. மேலும் நட்சத்திர ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி கரைபுரண்டு ஓடியது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டியது. இந்த கனமழை பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் பயிர்களுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனிடையே கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News