செய்திகள்
முக ஸ்டாலின்

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்பு

Published On 2021-05-07 00:56 GMT   |   Update On 2021-05-07 01:03 GMT
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். அவரது தலைமையில் அமையும் 34 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவி ஏற்கிறது.
சென்னை:

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார்.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையிலேயே பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட சுமார் 160 பேர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்து வைக்கிறார்.
Tags:    

Similar News