செய்திகள்
கைது

திண்டுக்கல்லில் போலி நகையை கொடுத்து ஏமாற்றிய பெண் கைது

Published On 2021-05-06 10:08 GMT   |   Update On 2021-05-06 10:08 GMT
திண்டுக்கல்லில் போலி நகையை கொடுத்து ஏமாற்றி பணம் பெற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் சன்னதிதெருவில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கடைக்கு 2 பெண்கள் வந்தனர். அவர்கள் 10 பவுன் பழைய நகையை கொடுத்துவிட்டு புதிய நகை தருமாறு கேட்டனர். கடைக்காரர்கள் நகையை சோதனைசெய்தபோது அது ஒரிஜினல் தங்கம் என தெரியவந்தது.

இதனையடுத்து 8 பவுன் மதிப்பிலான புதிய தங்கநகையை கொடுத்தார். அந்த பெண்கள் சென்ற பிறகு மீண்டும் நகையை பரிசோதனை செய்தபோது அது போலி என தெரியவந்தது. இதுகுறித்து நகர்வடக்கு போலீசில் கணேசன் புகார் அளித்தார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் பழைய நகையை மேஜையில் வைத்தபோது ஊழியர்களுக்கு தெரியாமல் அதை எடுத்துவிட்டு போலி நகையை வைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். சேலம் மாவட்டம் தாதாபட்டியை சேர்ந்த வசந்தா(40). அவரது தங்கை ராதா(36) ஆகியோர்தான் நகையை திருடியது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராதாவை கைது செய்தனர். வசந்தாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News