செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்டை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை- அதிகாரி தகவல்

Published On 2021-04-29 06:16 GMT   |   Update On 2021-04-29 06:16 GMT
முககவசம் அணியாதவர்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மார்க்கெட் நிர்வாக கமிட்டி மூலம் பின்பற்றப்படுகின்றன.
சென்னை:

கடந்த ஆண்டு சென்னையில் கொரோனா தொற்று பரவ கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணமாக இருந்தது. இதனால் மே மாதம் மார்க்கெட் முழுமையாக மூடப்பட்டது.

அங்கு செயல்பட்ட மொத்த காய்கறி கடைகள், திருமழிசைக்கு மாற்றப்பட்டது. பழக்கடைகள் மாதவரம் புதிய பஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தநிலையில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மொத்த வியாபாரிகள் அதிகாலை 4 மணிமுதல் 12 மணிவரை வியாபாரம் செய்யவும், சில்லரை வியாபாரிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் வியாபாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மார்க்கெட்டுக்கு வருகின்ற அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. வெளிமாநில வாகனங்கள் தனியாக கண்காணிக்கப்படுகிறது. வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முககவசம் அணியாதவர்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மார்க்கெட் நிர்வாக கமிட்டி மூலம் பின்பற்றப்படுகின்றன. இதுதவிர ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மார்க்கெட் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன.

மேலும் மாநகராட்சி மூலம் 3 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை அங்கு செய்யப்படுகிறது. தேவைப்படுவோருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.



இந்த கட்டுப்பாடுகளால் கோயம்பேடு மார்க்கெட்டில் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு அதிகாரி கோவிந்தராஜ் கூறுகையில், ‘கடந்த 10 நாட்களில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியானது.

அதுவே இந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் இப்போது தொற்று குறைந்துள்ளது. அதனால் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் இப்போது இல்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மார்க்கெட்டுக்கு தினமும் 30 ஆயிரம் வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். தொற்று பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News