செய்திகள்
இரண்டு முகக்கவசம் அணிந்திருப்பவர்

2 முகக்கவசம் அணியலாமா?- சுவாசப்பிரச்சினை வராமல் சமாளிக்கும் வழிகள்

Published On 2021-04-28 11:26 GMT   |   Update On 2021-04-28 11:26 GMT
கொரோனா 2-வது அலை இரு மடங்கு வீரியமாக தாக்குகிறது. இரட்டை மாஸ்க் அணிவதுதான் இப்போதைக்கு பலன் கொடுக்கும் என்பது புதிய முறையாக உருவெடுத்து உள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த முகத்தில் கட்ட வேண்டியது முகக்கவசம் என்பது உலக நியதியாகி விட்டது.

கொரோனா எப்படி தன்னை உருமாற்றி கொள்கிறதோ? அதேபோல இந்த முகக்கவசங்களையும் மாற்றி மாற்றி அணிய வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் முகக்கவசம் அணிவது தொடர்பாக சில வழிமுறைகளை அரசு அறிவித்தது. அதன்படி

* மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியதில்லை.

* 3 வகையான மக்கள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதுமானது.

* சளி, காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்ட மக்கள்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களைக் கவனித்துக் கொள்வோர்.

* மூச்சு விடுவதில் சிரமம் கொண்ட நோயாளிகளைப் பராமரிக்கும் சுகாதார ஊழியர்கள்.

-இவர்கள் மட்டும் மாஸ்க் அணிந்தால் போதுமானது.

அதேபோல் முகக்கவசம் அணிவதிலும் சில முறைகளை சுட்டிக்காட்டினார்கள்.

* மாஸ்க்கின் மடிப்புகளை விரித்து, கீழ்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

* மூக்கு, வாய், மோவாய் ஆகியவை முழுமையாக மூடுமாறு மாஸ்க் அணிய வேண்டும்

* மாஸ்க்கின் அனைத்துப்புறங்களிலும் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

* 6 மணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது மாஸ்க் ஈரமான பிறகு, அதை மாற்றிவிட வேண்டும்.

* ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மாஸ்க்கை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

* பயன்படுத்திய மாஸ்க்கை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

* மாஸ்க்கைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது கைகளால் தொடக்கூடாது.

* மாஸ்க்கைக் கழற்றும்போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ள வெளிப்புறத்தைக் கட்டாயம் தொடக்கூடாது.

* மாஸ்க்கைக் கழுத்தில் தொங்க விடக்கூடாது.

* மாஸ்க்கைக் கழற்றிய பிறகு கைகளை சுத்திகரிப்பான்களால், முறையாகக் கழுவ வேண்டும்.



இப்போது 2-வது அலை இரு மடங்கு வீரியமாக தாக்குகிறது. இப்போது மாஸ்க் அணிவதிலும் புதிய முறை கூறப்படுகிறது. இரட்டை மாஸ்க் அணிவதுதான் இப்போதைக்கு பலன் கொடுக்கும் என்பது புதிய முறையாக உருவெடுத்து உள்ளது.

சிலர் ஒற்றை மாஸ்க் போடுவதே மூச்சு முட்ட வைக்கிறதே? இதில் இரட்டை மாஸ்க் வேறா? எப்படிடா சாமி சமாளிப்போம் என்று புலம்புவதும் கேட்கிறது. ஆனால் அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நடத்தி உள்ள ஆய்வுகளில் தற்போதைய கொரோனாவை கட்டுப்படுத்த இரட்டை மாஸ்க் அணிவதே சிறந்தது.

துணி மாஸ்க் மற்றும் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் மாஸ்க் ஆகிய இரண்டையும் சேர்த்து அணிந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் வைரஸ் வெளிப்படுதலை 95 சதவீதம் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

அதாவது இந்த மாதிரி முகக்கவசம் அணியும்போது காற்று வெளியே செல்வது தடுக்கப்படுகிறது. முகத்துக்கு பொருத்தமாகவும் உள்ளது.

முதலில் ஒரு மாஸ்கை அணிய வேண்டும். அதன்மேல் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விளிம்புகளை இணைத்து காது நாடாக்களை முடிச்சு போட்டு அணிய வேண்டும்.

துணி முகக்கவசம் இருமும்போது வெளிப்படும் நீர் திவளைகளை 51.4 சதவீதம் தடுக்கிறது. அதேநேரம் முடிச்சு போடப்படாத அறுவை சிகிச்சை மாஸ்க் 56.1 சதவீதம் தடுத்துள்ளது.

முடிச்சு போட்டு அணியப்பட்ட அறுவை சிகிச்சை மாஸ்க் 77 சதவீதம் தடுத்துள்ளது.

ஒரு துணி முகக்கவசம் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தை சேர்த்து அணியும்போது இருமல் நீர்திவளைகள் வெளியேறுவது 85.4 சதவீதம் வரை தடுக்கப்பட்டுள்ளது.

சுவாசப்பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணியும்போது நன்றாக சுவாசிக்க முடிகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முகத்துக்கு பொருத்தமாகவும், சவுகரியமாகவும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக மாஸ்கை அணிந்து கொண்டு சிறிது நேரம் நடந்து செல்ல வேண்டும்.

அணியும் முகக்கவசம் சுவாசிக்கும்போது காற்றோட்டத்துடன் உள்ளே அழுந்த வேண்டும்.

மூக்கு கண்ணாடி புகை மூட்டமாகி மங்கலாக இருக்கிறது என்றால் முகக்கவசத்தின் இடைவெளியில் காற்று வெளியே செல்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முகக்கவசத்தை அணிந்தபிறகு கண்ணாடியின் முன்பு நின்று பலமாக மூச்சுவிட வேண்டும். அப்போது கண்ணை சிமிட்டினால் கண் இமைகள் மீதுபடும் காற்று முகக்கவசத்தில் இருந்து வெளியே வருகிறது என்று அர்த்தம்.
Tags:    

Similar News