செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 35 காசுகள் குறைப்பு

Published On 2021-04-24 04:31 GMT   |   Update On 2021-04-24 16:53 GMT
கொரோனா 2-வது அலை பரவலால் இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால் தினசரி உற்பத்தியாகும் முட்டைகளை முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

நாமக்கல்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலால் போடப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் நலிவடைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் புத்துயிர் பெற்றன. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பழைய நிலையை எட்டும் அளவுக்கு தொழில்கள் வேகமாக நடைபெற்றன.

இந்த சூழ்நிலையில் கொரோனா 2-வது அலை பரவல் சற்று வேகமாக இருப்பதால் சிறுதொழில் செய்வோர், நடுத்தர தொழில் வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கலக்கத்தில் உள்ளார்கள்.

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. கொரோனா 2-வது அலை பரவலால் இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால் தினசரி உற்பத்தியாகும் முட்டைகளை முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இதனால் முட்டைகள் தேக்கம் அடைவதை தடுக்க ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு முட்டை விலையில் 35 காசுகள் குறைக்கப்பட்டது. இதனால் 485 காசுகளாக இருந்த முட்டை விலை 450 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை முதல் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் முட்டைகள் விற்பனையை அதிகரிக்கவும், தேக்கம் அடையாமல் விற்பனை செய்யவும் முட்டை விலை மேலும் 35 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 450 காசுகளாக இருந்த முட்டை விலை இன்று 415 காசுகளாக குறைந்துள்ளது.

Tags:    

Similar News