செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 2 ஆயிரம் சிறுவர்களை முடக்கிய கொரோனா

Published On 2021-04-18 08:17 GMT   |   Update On 2021-04-18 08:17 GMT
தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது 2 மடங்காக அதிகரித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு சிறுவர்களையும் முடக்கிப் போடுவது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் சிறுவர்களை அதிகளவில் பாதிக்கவில்லை.இந்த நிலையில் தற்போது 2-வது அலையாக வேகமாக பரவும் வைரஸ் தொற்று 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கி முடக்கி உள்ளது.

கடந்த 10 நாட்களில் 12 வயதுக்குட்பட்ட 2 ஆயிரம் சிறுவர்-சிறுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 8-ந் தேதி 132 சிறுவர்கள் ஒரே நாளில் பாதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் அது 161-ஆக அதிகரித்தது. ஏப்ரல் 10-ந் தேதி 183 பேரும், 11-ந் தேதி 203 பேரும், 12-ந் தேதி 250 பேரும் பாதிக்கப்பட்டனர்.

அடுத்தடுத்த நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரித்தது. ஏப்ரல் 13-ந் தேதியன்று 225 சிறுவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 14-ந் தேதி 288 பேர் பாதிக்கப்பட்டனர்.


இப்படி படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்ற சிறுவர்களின் கொரோனா பாதிப்பு ஏப்ரல் 15-ந் தேதி கொஞ்சம் குறைந்தது. அன்றைய தினம் 256 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதற்கு மறுநாள் ஏப்ரல் 16-ந் தேதியன்று 310 பேரும், ஏப்ரல் 17 அன்று 319 பேரும் பாதிக்கப்பட்டனர்.

சிறுவர்களை அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்காது என்று சுகாதாரத் துறையினர் கூறி இருந்த நிலையில் கடந்த 10 நாட்களில் அதிகளவில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது சுகாதாரத் துறையினரையும், பெற்றோர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதேபோன்று தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 8-ந் தேதியன்று 4,276 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இது படிப்படியாக உயர்ந்து ஏப்ரல் 11-ந் தேதியன்று 6 ஆயிரத்தை கடந்தது. 14-ந் தேதி 7 ஆயிரத்தை கடந்து 8 ஆயிரத்தை எட்டி இருந்தது. ஏப்ரல் 16-ந் தேதியன்று 8,443 பேரும், ஏப்ரல் 17-ந் தேதியன்று 8,344 பேரும் பாதிக்கப்பட்டனர்.

நேற்று ஒரே நாளில் தினசரி பாதிப்பு 9 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News