செய்திகள்
கோவில்பட்டி புதுரோடு பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணலாம்.

கோவில்பட்டியில் 86 மில்லிமீட்டர் மழை

Published On 2021-04-16 10:09 GMT   |   Update On 2021-04-16 10:11 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடனும், இடி-மின்னலுடனும் பலத்த மழை கொட்டியது. கோவில்பட்டியில் 86 மி.மீட்டர் மழை கொட்டியது.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டுகிறது.

மேலும் சில இடங்களில் சூறாவளி காற்றும் வீசி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 10 மி.மீட்டர் மழையும், கொடுமுடியாறு 7மி.மீட்டர், சேர்வலாறில் 3 மி.மீட்டர், பாளை 2 மி.மீட்டர், நெல்லை 1 மி.மீட்டர் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் சிவகிரியில் 2 மி.மீட்டரும், கருப்பாநதியில் 1 மி.மீட்டரும் மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடனும், இடி-மின்னலுடனும் பலத்த மழை கொட்டியது. கோவில் பட்டியில் 86 மி.மீட்டர் மழை கொட்டியது.

இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. எட்டயபுரம் பகுதியில் 42 மி.மீட்டரும், கடம்பூர் 35 மி.மீட்டர், கயத்தாறு 25 மி.மீட்டர், ஓட்டப்பிடாரம், காடன்குடி பகுதியில் 9 மி.மீட்டர் மழையும், விளாத்திகுளம் 8 மி.மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 5 மி.மீட்டர், வைப்பார் 2 மி.மீட்டர் மழையும் பெய்தது.

இதனால் தூத்துக்குடி பகுதியில் வெப்பகாற்று நீங்கி, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.

நெல்லை மாவட்டத்திலும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் 100 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியது. ஆனால் தற்போது வெப்பம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.

மழை காரணமாக பாப நாசம் அணைக்கு வினாடிக்கு 78 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 105 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 105.35 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.63 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 92.75 அடியாகவும் உள்ளது.

இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளிலும் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.


Tags:    

Similar News