செய்திகள்
வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காணலாம்

கொடைக்கானலில் விடிய விடிய கொட்டிய மழை

Published On 2021-04-16 04:03 GMT   |   Update On 2021-04-16 04:03 GMT
கொடைக்கானலில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மேலும் சகதியில் சுற்றுலா வாகனம் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு,குளு சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.

அதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடைக்கானல் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை தொடங்கிய மழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 56.6 மில்லி மீட்டரும், பிரையண்ட் பூங்காவில் 87 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

விடிய, விடிய கொட்டி தீர்த்த பலத்த மழையால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பாறைகள், பாறாங்கற்கள் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் சிதறி கிடந்தன.

இதனால் அந்த மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடைக்கானல் பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் கொடைக்கானல் பைன் மரக்காடுகள் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மழை காரணமாக அந்த இடமே சகதிக்காடாக மாறியுள்ளது. இதில் அந்த வழியாக வந்த ஒரு சுற்றுலா வாகனம் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News