செய்திகள்
கோப்புப்படம்

ஏ.சி. ரெயில் பெட்டி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, கம்பளி மீண்டும் ரத்து

Published On 2021-04-15 06:30 GMT   |   Update On 2021-04-15 06:30 GMT
ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது.
சென்னை:

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

ரெயில்களில் குளிர் சாதனபெட்டி பயணிகளுக்கு தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு கம்பளி, படுக்கை விரிப்பு போன்றவை ரத்து செய்யப்பட்டது.

மேலும் ஏ.சி. ரெயில் பெட்டிகளில் கொரோனா பரவாமல் தடுக்க குளிர்ச்சியை குறைத்து மிதமான வெப்பத்தில் இயக்கப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதுவரையில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு அளித்து வந்த படுக்கை விரிப்பு, கம்பளி, தலையணை போன்றவை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரெயில்களிலும் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த வசதிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தங்களது சொந்த படுக்கை விரிப்புகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏ.சி. ரெயில் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

ஆனால் திடீரென்று இந்த வசதி ரத்து செய்யப்பட்டதால் அதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் திருப்பி தருவது முறையாகும். ஆனால் அது பற்றிய எந்த தகவலும் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News