செய்திகள்
சென்னை மாநகராட்சி

கொரோனா காலத்திலும் சென்னை மாநகராட்சியில் ரூ.478 கோடி சொத்து வரி வசூல்

Published On 2021-04-12 07:43 GMT   |   Update On 2021-04-12 07:43 GMT
வருகிற 15-ந் தேதி வரை கடந்த ஆண்டிற்கான சொத்துவரியை செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 16-ந் தேதி முதல் 2 சதவீதம் அபராதத்துடன் சொத்து வரி வசூலிக்கப்படும்.
சென்னை:

சென்னை மாநகராட்சியில் 12 லட்சத்து 86 ஆயிரம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்கள் உள்ளனர்.

வீடு, கடைகள், வணிக வளாகங்கள் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியது. இதனால் சொத்து வரி வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் சொத்துவரி வசூல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிப்பது உண்டு. கடந்த 2020-21 புதிய ஆண்டுக்கான சொத்துவரி கொரோனா பரவல் காரணமாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் ரூ.478.66 கோடி சொத்துவரி வசூலாகி உள்ளது.

இது கடந்த 2019-2020 ஆண்டைக்காட்டிலும் பாதியாக குறைந்துள்ளது. 2019-2020-ல் ரூ.928 கோடி வசூலாகி இருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்ததால் தொழில்கள் முடங்கியதாலும், பொதுமக்களின் வருவாய் இழப்பினாலும் சொத்துவரி குறைந்துள்ளது.



இது குறித்து வருவாய் துறையை சேர்ந்த அதிகாரி கூறும்போது, கொரோனா காலத்திலும் சொத்துவரி இந்த அளவிற்கு வசூலாகி இருப்பது பெரிய வி‌ஷயமாகும். இத்தகைய சூழலில் யாரையும் கட்டாயப்படுத்த முடியவில்லை. ஆனாலும் வருவாய் துறை ஊழியர்கள் உற்சாகமாக பணியாற்றியதன் மூலம் இந்த தொகை வசூலாகி உள்ளது.

தற்போது ஆன்லைன் வழியாக சொத்துவரி எளிதாக கட்ட முடியும். சொத்து வரி முறையாக செலுத்தினால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அந்த அடிப்படையில் வருகிற 15-ந் தேதி வரை கடந்த ஆண்டிற்கான சொத்துவரியை செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

16-ந் தேதி முதல் 2 சதவீதம் அபராதத்துடன் சொத்து வரி வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News