செய்திகள்
கரூரில் மனநல மீளாய்வு மன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

காப்பகங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் - மீளாய்வு மன்ற தலைவர் எச்சரிக்கை

Published On 2021-04-10 12:06 GMT   |   Update On 2021-04-10 12:06 GMT
மனநலகரிசனச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத காப்பகங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மனநல மீளாய்வு மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர்:

கரூர் பழைய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாவட்ட மனநல மீளாய்வு மன்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான மோகன்ராம் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும், மனநல மீளாய்வு மன்ற தலைவருமான வி.பாலசுந்தரகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் பதிவுப்பெறாத மனநல காப்பகங்கள், ஆஸ்பத்திரிகள் இயங்குவதாக மன்றத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. மனநல பராமரிப்பு சட்டத்தின்கீழ் மனநல காப்பகங்கள், ஆஸ்பத்திரிகள் மாநில மனநல ஆணையத்திடம் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். மனநல கரிசனச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யாமல், வேறு சட்டத்தின் கீழ் மனநல காப்பகங்கள் பதிவு செய்திருந்தால் அது சட்டப்படி செல்லாது. அனைத்து மனநல காப்பகங்களும், மனநல கரிசனச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது அவசியம். பதிவு செய்யாவிட்டால் ரூ.5 லட்சம் வரை மாநில மனநல ஆணையம் அபராதம் விதிக்கலாம்.

அத்தகைய மனநல காப்பகங்கள், ஆஸ்பத்திரிகள் இயங்குவதற்கு தடை விதிக்கலாம். பதிவுசெய்யாத நிறுவனங்களின் பட்டியலை மனநல மீளாய்வு மன்றத்திற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு மனநல காப்பகத்திலும் வெளிப்படையாக தெரியும் அளவில் மனநல சீராய்வு மன்றத்தின் முகவரி, தொலைபேசி எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டும்.

மனநல நோயாளிகளும் சாதாரண உடல்நோயாளி போன்றவர் ஆவர். சாதாரண நோயாளிகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் சட்டப்படி மனநோயாளிகளுக்கும் கிடைக்கப்பெற வேண்டும். மனநோயாளிகள் அனைவரும் இலவச சட்டவசதி பெற மனநல கரிசனச்சட்டம் பிரிவு 27-ன்படி உரிமை உள்ளது. மனநோயாளிகளை அடைத்து வைத்து துன்புறுத்துவதோ, சங்கிலியால் பிணைத்து வைத்து துன்புறுத்துவதோ, கட்டிப்போட்டு துன்புறுத்துவதோ சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து தகவல் அறிந்தால் மீளாய்வு மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் உலகநாதன், திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மனநல மருத்துவர் ரமேஷ் பூபதி, உறுப்பினர்கள் செல்வராஜ், முத்துசாமி, சட்ட தன்னார்வலர்கள் சங்கீதா, வெண்ணிலா, 25-க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News