செய்திகள்
சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வருவதாக கூறி கரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களை படத்தில் காணலாம்.

சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம்: கரூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

Published On 2021-04-09 13:40 GMT   |   Update On 2021-04-09 13:40 GMT
சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி கரூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கரூர்:

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம் தெரு, அன்சாரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் குடிநீர் சரியாக வருவதில்லை. அவ்வாறு வரும் குடிநீரும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை காலிக்குடங்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் வந்த குடிநீரை ஒரு சில்வர் பானையில் எடுத்து கொண்டு நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் வெளியே வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக உங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு சரி செய்யப்படும் என தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News