செய்திகள்
கோப்புப்படம்

நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

Published On 2021-04-07 17:57 GMT   |   Update On 2021-04-07 17:57 GMT
பள்ளிப்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சம்பத்குமார் (வயது 26).) பொக்லைன் எந்திர டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பர் கிஷோர் (24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மது வாங்கி வர ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர்.புரம் என்ற இடத்திற்கு சென்றனர். அங்கு மது வாங்கிக்கொண்டு அவர்கள் திரும்பி வரும்போது பெட்ரோல் நிலையம் எதிரே நெல் மூட்டைகளுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து கார்வேட்டி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் பலியான சம்பத்குமார், கிஷோர் ஆகியோரின் சொந்த ஊரான ஈச்சம்பாடி கிராமத்தில் நேற்று காலை 7 மணிக்கு 2 வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டன. ஆனால் இருவரை பலி கொடுத்த காரணத்தால் அந்த கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதனால் வாக்களிக்க யாரும் வாக்குச்சாவடிக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்கள், போலீஸ் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். சோகத்தில் மூழ்கி வாக்களிக்க செல்லாமல் இருந்த கிராம மக்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருவது. அதை புறக்கணிப்பதால் மக்களுக்கு நஷ்டமே தவிர லாபம் எதுவும் இல்லை. எனவே வாக்குப்பதிவு நடைபெற கிராம மக்கள் ஒத்துழைப்பு தருவதோடு, தங்கள் வாக்குகளையும் அமைதியான முறையில் பதிவு செய்ய போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் காலை 8½ மணிக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். அதன் பிறகு அந்த 2 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. பள்ளிப்பட்டு தாலுகாவிலுள்ள தளவாய்பட்டடை, கொடிவலசை, கொத்தூர் போன்ற வாக்குச்சாவடிகளில் சிறிது நேரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகி வேலை செய்யவில்லை. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து சென்று பழுது பார்த்து மீண்டும் வாக்குப்பதிவை தொடர்ந்தனர்.
Tags:    

Similar News