செய்திகள்
கோப்புப்படம்

பல மாவட்டங்களில் வழக்கத்தை விட 10 டிகிரி வெப்பம் அதிகரிப்பு

Published On 2021-04-04 07:27 GMT   |   Update On 2021-04-04 07:27 GMT
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இளநீர், மோர், தர்பூசணி அதிக அளவில் விற்பனையாகிறது. இளநீர் ரூ.55 வரை விற்கிறது.
சென்னை:

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வழக்கமாக கோடையில் பதிவாகும் வெப்பத்தை விட தற்போது அதிகமாக பதிவாகி இருக்கிறது. சில இடங்களில் 10 டிகிரி வரை அதிகரித்துள்ளது.

கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. சுட்டெரிக்கும் வெயிலுடன் வீசும் அனல் காற்று ரோட்டில் நடந்து செல்லும் போது அனலை அள்ளி வீசுவதுபோல் உடலை தாக்குகிறது.

ஏற்கனவே பகல் நேரங்களில் வெளியே அலைவதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக திருச்சி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 15 டிகிரி வரை அதிகம் என்று கூறப்படுகிறது.

மற்ற இடங்களில் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

சென்னை (நுங்கம்பாக்கம்) 109.9 டிகிரி, சென்னை (மீனம்பாக்கம்) 100.5, கடலூர்- 101.6, தர்மபுரி- 104 டிகிரி, ஈரோடு- 106.5, கன்னியாகுமரி- 94, கரூர் பரமத்தி- 106.7, மதுரை விமான நிலையம்- 106.1, சேலம் 105.4, திருப்பத்தூர்- 108.68, திருச்சி-108.5, திருத்தணி- 107.2, வேலூர்- 108.5 டிகிரியாக வெப்பம் நிலவியது.


வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இளநீர், மோர், தர்பூசணி அதிக அளவில் விற்பனையாகிறது. இளநீர் ரூ.55 வரை விற்கிறது.

ரோட்டோரங்களிலும் தற்காலிக ஜூஸ், கூழ், சோற்று கற்றாழை- மோர் ஜூஸ் கடைகள் அதிக அளவில் வந்துள்ளன.
Tags:    

Similar News