செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-03-30 11:52 GMT   |   Update On 2021-03-30 11:52 GMT
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணியில் வட்டார கிராமங்களான ராமச்சந்திராபுரம், படுதலம், பெருமாநல்லூர், மேலப்பூடி, சொரக்காயப்பேட்டை, கீளப்பூடி, ஸ்ரீகாவேரிராஜபேட்டை, மேல்பொதட்டூர், பாண்டறவேடு, அகூர், திருத்தணி பகுதிகளில் வசிக்கும் குறிப்பிட்ட பிரிவினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா, மானிய விலையில் விவசாய விளைபொருட்கள், உரங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணி ஆர்.டி.ஓ., தாசில்தார் என அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இதனால் அவர்கள் நேற்று தங்களது கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைக்கப்போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News