செய்திகள்
பள்ளத்தில் தவறி விழுந்த பெண் யானை இறந்து கிடப்பதை காணலாம்.

பெண் யானை பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

Published On 2021-03-25 10:16 GMT   |   Update On 2021-03-25 10:16 GMT
ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.
பென்னாகரம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் தேடி யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கி உள்ளன. வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இந்த யானைகள் கூட்டம், கூட்டமாக ஒகேனக்கல் செல்லும் சாலையை கடந்து அங்கும், இங்குமாக சுற்றித்திரிகின்றன. மேலும் யானைகள் தண்ணீர் குடிக்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அடிக்கடி வருகின்றன. இந்த யானைகள் ஒகேனக்கல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடித்து விட்டு செல்கின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று குட்டியுடன் முண்டச்சிப்பள்ளம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தண்ணீர் குடிக்க சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது பள்ளத்தில் தவறி விழுந்து அந்த பெண் யானை செத்தது. இதனால் குட்டி யானை ஒகேனக்கல் சாலையில் அங்கும், இங்குமாக பிளிறியபடி சுற்றித்திரிந்தது.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஒகேனக்கல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது பள்ளத்தில் பெண் யானை இறந்து கிடப்பதும், தாயை இழந்த குட்டி யானை பிளிறியபடி சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பின்னர் வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினரை வரவழைத்து இறந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வனப்பகுதியில் குழிதோண்டி யானையை வனத்துறையினர் புதைத்தனர். பெண் யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனப்பகுதியில் கடும் வறட்சியால் தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News