செய்திகள்
வருமான வரித்துறை

வரி ஏய்ப்பு புகார்- ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.10 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்

Published On 2021-03-23 09:34 GMT   |   Update On 2021-03-23 09:34 GMT
வருமான வரித்துறை அதிகாரிகள் தொழிலதிபருக்கு சொந்தமான திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள நிறுவனம், வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி:

நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தனிநபர் வருமானம் தாக்கல் செய்வதற்கு நடப்பு ஆண்டுக்கு இம்மாதம் 31-ந்தேதி இறுதி நாள் ஆகும்.

ஆனால் சில நிறுவனங்கள் முறையாக வரியை செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக புகார் வந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆவணங்களை ஆய்வு செய்வது வழக்கம்.

அந்த வகையில், திருச்சி புதுக்கோட்டை சாலை விமான நிலையம் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள தொழிலதிபர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து நேற்று மாலை 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று தொழிலதிபருக்கு சொந்தமான திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள நிறுவனம், திருச்சி கே.கே.நகரில் உள்ள வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர்.

அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தும், வரவு, செலவு கணக்குகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த நிறுவனம் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை இரவிலும் நீடித்தது.

முடிவில் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News