செய்திகள்
கைது

எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

Published On 2021-03-12 09:52 GMT   |   Update On 2021-03-12 09:52 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருநாவலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 65). இவர் விழுப்புரம் அருகே உள்ள திருநாவலூர் எம்.குன்னத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.

ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்ற நோயாளிகளில் ஒரு சிலருக்கு சிவலிங்கத்தின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் திருநாவலூர் போலீசார் சிவலிங்கம் நடத்திவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சிவலிங்கம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் சிவலிங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அவர் சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

இதை அடுத்து அந்த ஆஸ்பத்திரியில் இருந்த மருத்துவ உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்ட அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி அளித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் சிவலிங்கத்தை கைது செய்தனர்.

பின்னர் அவரை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News