செய்திகள்
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2021-03-03 09:12 GMT   |   Update On 2021-03-03 09:12 GMT
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். முன்கள பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் தடுப்பூசி போட முன்வர வேண்டும்.

முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. 650 அரசு ஆஸ்பத்திரிகளிலும் 650 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்கள் தயக்கம் காட்டும் போது முதியவர்கள் ஆர்வமாக வருவதை பாராட்டுகிறேன். நேற்று மட்டும் 41,643 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில் 1000 தெருக்களில் இருந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 5, 6 பேரும் தினமும் வருகிறார்கள்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. பல மாவட்டங்களில் குறைந்துவிட்டது.

திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் முககவசம் அணியாததை பார்க்கும் போது கவலை அளிக்கிறது.

ஓட்டல், பஸ், ரெயில் பயணத்தின் போதும் முககவசம் அணியாமல் பயணம் செய்கிறார்கள். அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். உணவு அருந்தும் இடங்களில் நெருங்கி நிற்காமல் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

கொரோனா போய்விட்டது என்று யாரும் எண்ண வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். தொற்று அறிகுறி இருந்தால் உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வரவேண்டும்.

கொரோனா தடுப்பூசி காலாவதியாகிவிட்டது என்று தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். 26 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு நமக்கு கொடுத்துள்ளது.

அனைவரும் தடுப்பூசி போட முன்வர வேண்டும். இதுவரையில் 5.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News