செய்திகள்
கைது

கடையம் அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொடூரக்கொலை- அண்ணன் கைது

Published On 2021-03-01 13:25 GMT   |   Update On 2021-03-01 13:25 GMT
கடையம் அருகே தலையில் கல்லைப் போட்டு வாலிபரை கொடூரமாக கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புறங்காட்டான் புலியூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன்கள் ராஜேஷ் (வயது 36), பாஸ்கர் (33). ராஜேஷ், நாகர்கோவிலில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பாஸ்கர், சமையல் தொழிலாளியாக வேலை செய்தார்.

இவர்கள் திருமணமாகி, தங்களது குடும்பத்தினருடன் எதிரெதிர் வீடுகளில் வசித்தனர். பாஸ்கரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். பின்னர் பாஸ்கர், பவித்ரா என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் பாஸ்கருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்ற பாஸ்கர், இரவில் மது குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் அவர் மனைவி பவித்ராவிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.

இதனால் பவித்ரா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து, ராஜேஷின் வீட்டுக்கு சென்றார். ஆனாலும் பாஸ்கர் மனைவியை துரத்திச் சென்று தாக்கினார்.

அப்போது வீட்டில் இருந்த ராஜேஷ், தன்னுடைய தம்பி பாஸ்கரை இழுத்து வெளியே தள்ளி விட்டார். பின்னரும் ஆத்திரம் தீராத ராஜேஷ் தன்னுடைய தம்பி என்றும் பாராமல், பாஸ்கரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாவூர்சத்திரம் அருகில் சென்றபோது பாஸ்கருக்கு மூச்சுத்திணறல் அதிகமானதால், அவரை மீண்டும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியில் பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர். தம்பியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News