செய்திகள்
நாராயணசாமி

அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன்- நாராயணசாமி அறிவிப்பு

Published On 2021-03-01 09:52 GMT   |   Update On 2021-03-01 09:52 GMT
அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று புதுவை முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.

சென்னை:

புதுவை முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் அப்போதைய துணை நிலை ஆளுனர் கிரண்பேடியுடன் சுமூகமான நிலை இருந்தது. அதன் பிறகு நிர்வாகத்தில் தலையிட தொடங்கினார். கோப்புகளை தாமதப்படுத்துவது, நிராகரிப்பது, வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டைபோடுவது, தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து உத்தரவு போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டார்.

மேற்படி தலைமையிலான மத்திய அரசு எங்கள் அரசை முடக்குவதற்காக கவர்னரை தூண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து ‘கிரண்பேடியே திரும்பி போங்கள்’ என்று போராடினோம்.

அதன் காரணமாக மாற்றப்பட்டார். இப்போது தமிழிசை கவர்னர் பொறுப்புக்கு வந்துள்ளார். ஆட்சி கவிழ்ப்பு மும்முரமாக நடந்தது.

அமித்ஷா புதுவைக்கு வந்து என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வினரை சந்தித்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார். சென்னையில் இருந்தும் பா.ஜனதா தலைவர்கள் வந்து முகாமிட்டனர். பெங்களூரில் இருந்து பணமூட்டைகள் கொண்டு வரப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டனர்.

எனக்கு அடுத்த அமைச்சராக இருந்த நமச்சிவாயம் ஒரு வருடமாக பா.ஜனதாவுடன் தொடர்பில் இருந்தார். அதேபோல் தீபாய்ந்தான் எம்.எல்.ஏ.வும் அவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

அவர்கள் மீதான வருமான வரி வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவாதம் கொடுத்தும், சிலரை மிரட்டியும், ஒரு சிலருக்கு பணம் கொடுத்தும் விலைக்கு வாங்கினார்கள். அப்படி இருந்தும் எங்கள் ஆட்சிக்கு பெரும்பான்மை இருந்தது.

ஆனால் நியமன உறுப்பினர்கள் 3 பேருக்கும் ஓட்டுரிமை இருப்பதாக கூறி கவிழ்த்தார்கள். இது மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டு நடத்தியது. 7 ஆண்டுகளுக்கு முன்பு மன்மோகன்சிங்கால் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்ட விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்கு மோடி இப்போது அடிக்கல் நாட்டியுள்ளார்.

நேற்று காரைக்காலுக்கு வந்த அமித்ஷா, மோடியிடம் இருந்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி வந்ததாகவும், ஒரு பகுதியை நான் எடுத்துக் கொண்டு மீதியை காந்தி குடும்பத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.

இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அமித்ஷா மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடருவேன். அவர் என்ன வழக்கு போட்ட்டாலும் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் புதுவை முதல்வர் வைத்தியலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக காங்கிரஸ் நிர்வாகிகள் வாசு, இல.பாஸ்கரன், சுமதி அன்பரசு, அகரம் கோபு உள்பட பலர் வரவேற்றனர்.

Tags:    

Similar News