செய்திகள்
கோப்பு படம்.

சுரண்டை அருகே பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.73 லட்சம் மோசடி

Published On 2021-02-16 12:38 GMT   |   Update On 2021-02-16 12:38 GMT
சுரண்டை அருகே பெண்ணிடம் ரூ.1.73 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:

சுரண்டை அருகே தட்டான்குளம் கிராமம் மந்தை தெருவைச் சேர்ந்தவர் மூக்கையா (வயது 62). இடைத்தரகரான இவர் தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில் நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த மதியழகன் (43) என்பவர் மூக்கையாவை சந்தித்துள்ளார். தன்னிடம் தளச்செங்கல் குறைந்த விலைக்கு இருப்பதாகவும், தேவைப்பட்டால் கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மூக்கையா, தளச்செங்கலை பார்வையிட செல்லலாம் என மதியழகனிடம் கூறியுள்ளார். உடனடியாக தட்டான்குளத்திற்கு வந்த மதியழகன் மூக்கையாவை அழைத்துக்கொண்டு செல்வதாக கூறியுள்ளார். வீட்டிற்கு அருகில் அவரை இருக்கச் சொல்லிவிட்டு, அவரது வீட்டிற்கு நைசாக மதியழகன் சென்றுள்ளார். வீட்டில் இருந்த மூக்கையா மனைவி பலவேசம்மாளிடம், ‘உங்கள் கணவர் தளச்செங்கலுக்கு ரூ.1.73 லட்சம் வாங்கி வருமாறு கூறியதாக தெரிவித்தார். 

இதை நம்பிய பலவேசம்மாள், அவரிடம் அந்த பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட மதியழகன் வேகமாக அந்த ஊரில் இருந்து சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு மூக்கையா வந்தார். அப்போது மதியழகனிடம் பணம் கொடுத்த விவரத்தை பலவேசம்மாள் கூறியுள்ளார். இதையடுத்து மதியழகன் பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உடனடியாக சாம்பவர் வடகரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News