செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் கூட்டத்தை காணலாம்.

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்- கடற்கரை களை கட்டியது

Published On 2021-02-01 04:36 GMT   |   Update On 2021-02-01 04:36 GMT
கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடற்கரை களை கட்டியது.
கன்னியாகுமரி:

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்படும். இதனால் இந்த 3 மாதமும் கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதுபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசன் காலத்திலும் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலை சீசனில் அய்யப்ப பக்தர்கள் வரவில்லை.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் காலையில் சூரிய உதயத்தை கண்டுகளித்து, கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கடற்கரை களை கட்டியது. ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
Tags:    

Similar News