செய்திகள்
கைது

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

Published On 2021-01-30 03:36 GMT   |   Update On 2021-01-30 03:36 GMT
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகனபிரியா (வயது 33). கடந்த ஆண்டு அரசு பணியில் சேர்ந்த அவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் தன்னுடைய தந்தை பெயரில் உள்ள பட்டாவை தன்னுடைய பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மோகனபிரியா கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மூர்த்தி திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைப்படி மூர்த்தி நேற்று வெள்ளாத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு இருந்த மோகனபிரியாவிடம் லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தமிழரசி ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மோகனபிரியாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Tags:    

Similar News